அடிக்கடி ஏற்படும் விபத்தை தடுக்க பாம்பாறு பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் உடனே கட்ட வேண்டும்

  |   Pudukkottainews

திருமயம்,அக்.15: திருமயம் அருகே விபத்தை ஏற்படுத்தும் வகையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குறுகிய பாலத்தை உடனே அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வழியாக செல்லும் சிவகங்கை, ராமேஸ்வரம், மதுரை, காரைக்குடி சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு 10 ஆண்டுகளை கடந்த நிலையில் இதுவரை அப்பகுதியில் நடைபெற்ற பல்வேறு சாலை விபத்துகளில் 100க்கும் மேற்பட்ட உயிர்கள் பறி போயின. இதற்கு தேசிய சாலை போக்குவரத்துக்கு ஏற்ப அகலம் இல்லாமல் இருப்பதே காரணம் என அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர். மாநில சாலையாக இருந்த போது விபத்து அதிகம் நடந்ததால், தேசிய சாலையாக மாற்றப்பட்டது.

இந்நிலையில் தேசிய சாலை அமைத்த பின்னர் விபத்துகளின் எண்ணிக்கை, உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே இருப்பது அப்பகுதி வாகன ஓட்டிகளை அச்சத்தில் உறைய வைத்துள்ளது. இதனிடையே திருமயத்தை அடுத்துள்ள பாம்பாறு பாலம் தேசிய சாலை பணியின் போது விரிவுப்படுத்தப்படால் பழைய பாலத்தையே போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த பாலம் சாலையை விட சிறியதாக உள்ளதால் வாகனங்கள் அப்பகுதியில் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே திருமயம் பகுதியில் மாதம் 5 விபத்துக்கு மேல் நடக்கும் நிலையில் தேசிய சாலையில் உள்ள குறுகிய பாம்பாறு பாலம் மேலும் விபத்துகள் அதிகரிக்க காரணமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேசிய சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள பாம்பாறு பாலத்தை உடனே அகற்றிவிட்டு புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/rAtm4AAA

📲 Get Pudukkottainews on Whatsapp 💬