ஆவின் பால் கலப்பட முறைகேடு விவகாரத்தை மீண்டும் விசாரிக்க கோரி வழக்கு: ஆதாரங்களை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

  |   Chennainews

சென்னை: ஆவின் பால் கலப்பட வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆவின் பாலை விநியோகம் செய்யும் லாரிகளை இயக்கி வந்த ஒப்பந்ததாரர்கள், ஆவின் நிறுவனத்துக்கு கடந்த 2014ம் ஆண்டு, பாலை கொண்டு செல்லும் வழியில், பாலை திருடிவிட்டு அதற்கு பதிலாக தண்ணீர் கலப்படம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இந்த முறைகேடு காரணமாக ஆவின் நிறுவனத்திற்கு நாள் ஒன்றுக்கு ₹23 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கு தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, இந்த முறைகேடு குறித்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிடக் கோரி தமிழ்நாடு மக்கள் உரிமை அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

மனுவில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை 150 கோடி லாபத்தில் இயங்கி வந்த ஆவின், தற்போது நிர்வாக குளறுபடி காரணமாகவும், எந்த ஒப்பந்தமும் இல்லாமல் தினமும் 3.60 லட்சம் லிட்டர் பாலை தனியாருக்கு விற்பனை செய்து வருவதன் காரணமாகவும் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பை சந்தித்து வருகிறது. எனவே, ஆவின் நிறுவனத்தில் பால் கொள்முதல், விற்பனை, போக்குவரத்துக்கான டெண்டர் நடைமுறைகளை கண்காணிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பல்வேறு தகவல்களை தெரிவித்து வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, உங்களிடம் என்ன ஆதாரங்கள் உள்ளன என்று மனுதாரரின் வக்கீலிடம் கேட்டார். அதற்கு வக்கீல், ஆதாரங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்றார். இதையடுத்து, நீதிபதிகள், முழுமையான ஆதாரங்களை தாக்கல் செய்யுமாறு மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை மூன்று வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

போட்டோ - http://v.duta.us/yEu-1AAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/NyUJXAAA

📲 Get Chennainews on Whatsapp 💬