மருத்துவ கல்லூரி அமைக்க 25 ஏக்கர் நிலம் ஒப்படைப்பு

  |   Nilgirisnews

ஊட்டி, அக். 15:ஊட்டியில் மருத்துவக் கல்லூரி அமைக்க, எச்.பி.எப் பகுதியில் 25 ஏக்கர் நிலம் மாநில அரசு சுகாதாரத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட மக்கள், அவசர சிகிச்சை பெறவும், விபத்து காலங்களில் அறுவை சிகிச்சை பெறவும் கோவைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. நெடுந்தூரப் பயணம் என்பதால், விபத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை கிடைக்காமல், அவர்கள் உயிரிழக் கும் சம்பவங்கள் நடக்கின்றன. இதற்கு தீர்வு காண, ஊட்டியில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், எச்.பி.எப்., பகுதியில் மருத்துவக் கல்லூரி அமைக்க 25 ஏக்கர் நிலத்தை மாநில அரசு சுகாதாரத் துறைக்கு ஒப்படைத்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து சுகாதாரத் துறை இணை இயக்குநர் ஹிரியன் ரவிக்குமாரிடம் கேட்டபோது, ''மக்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு ஊட்டியில் மருத்துவக்கல்லூரி அமைக்க முடிவு செய்துள்ளது.

தற்போது மருத்துவக் கல்லூரிக்காக எச்.பி.எப். பகுதியில் 25 ஏக்கர் நிலம் சுகாதாரத் துறையிடம் அரசு ஒப்படைத்துள்ளது. கல்லூரி அமைப்பதற்காக திட்டம் தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. திட்ட மதிப்பீடு அரசுக்கு சமர்ப்பிக்கப்படும். அரசு நிதி ஒதுக்கிய பின்னர் பிற பணிகள் நடக்கும்' என்றார். பொதுமக்கள் கூறும்போது, ''ஊட்டியில் மூடப்பட்ட எச்.பி.எப்., நிறுவனம், 570 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இங்கு மருத்துவக் கல்லூரி அமைக்க அனைத்து கட்டமைப்பு வசதிகளும் உள்ளன. கட்டிடங்களும் தரமாக உள்ளன. சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, சில இடங்களில் புனரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும். இதனால், மருத்துவக் கல்லூரி அமைக்கும் திட்டத்துக்கு ஒதுக்கப்படும் பல கோடி ரூபாய் சேமிக்கப்படுவதுடன், விரைவில் மருத்துவக் கல்லூரி அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியும்,'' என்றனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/GoQoeAAA

📲 Get Nilgirisnews on Whatsapp 💬