அடிப்படை வசதி கோரி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்

  |   Tiruppurnews

திருப்பூர், அக். 17: திருப்பூர் அருகே மாநகராட்சி பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மக்கள் பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் நேற்று முன்தினம் மாலை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சி 30வது வார்டுக்குட்பட்ட பிச்சம்பாளையத்தை அடுத்த கேத்தம்பாளையத்தில் மாநகராட்சி பள்ளி உள்ளது. அங்கு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் போதுமான வகுப்பறைகள் இல்லாததால், சில சமயங்களில் மரத்தடியில் வைத்து மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் பள்ளியில் இருக்கும் வகுப்பறைகளும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதேபோல் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் முறையாக இல்லை என பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மக்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் வடக்கு தொகுதி எம்எல்ஏ, மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் சம்பந்தப்பட்ட பள்ளி முன்பு அமைப்பின் தலைவர் கார்மேகம் தலைமையில் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் சரவணன் உள்பட நிர்வாகிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர். அப்போது திடீரென அனைவரும் பள்ளி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையில் போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெற்றோர்கள் வைத்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி தருவதாக கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/rDcu7gAA

📲 Get Tiruppurnews on Whatsapp 💬