அறந்தாங்கி எம்ஜிஆர் நகர் சாலை படுமோசம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

  |   Pudukkottainews

அறந்தாங்கி, அக்.17: அறந்தாங்கி எம்.ஜி.ஆர் நகரில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்.என்.புரம் பகுதியில் இருந்து எம்.ஜி.ஆர் நகர் வழியாக பெரியகடை வீதிக்கு செல்லும் தார் சாலை உள்ளது. அறந்தாங்கி நகரின் இரண்டு முக்கிய பகுதிகளை இணைக்கும் சாலையாக இந்த சாலை உள்ளது. இந்த சாலை வழியாக வாராப்பூர், எல்.என்.புரம் பகுதிகளில் இருந்து அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவியர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள், பொதுமக்கள் சென்று வருகின்றனர். எம்.ஜி.ஆர் நகர் அருகே காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் ரயில்வே தண்டவாளம் செல்கிறது. இந்த பகுதியில் சாலை சேதமடைந்து, பள்ளமாக மாறியுள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. குறிப்பாக தனியார் பள்ளி வேன்கள் சிரமத்துடன் செல்கின்றன.

இது குறித்து சமூக ஆர்வலர் பாலாஜி கூறியது: எல்.என்.புரத்தில் இருந்து பெரிய கடைவீதி செல்லும் சாலை பழுதடைந்து உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. மழை பெய்தால் பள்ளத்தில் தண்ணீர் தேங்குவதால், பள்ளம் தெரியாமல் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தவறி விழுந்து செல்லும் நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/pkfqPQAA

📲 Get Pudukkottainews on Whatsapp 💬