இன்று பிரசாரம் செய்ய வரும் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

  |   Puducherrynews

புதுச்சேரி, அக். 17: புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், திமுக மற்றும் பல்வேறு கட்சிகள் இணைந்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக ஜான்குமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து வீடு, வீடாக வாக்கு சேகரித்து வருகிறோம். கூட்டணி கட்சிகள் ஒத்துழைப்போடு தேர்தல் பணியை சிறப்பாக செய்து வருகிறோம். முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்பி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் தனித்தனியாக மக்களை நேரடியாக சந்தித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். மக்களை அணுகும்போது கை சின்னத்திற்குத்தான் வாக்களிப்போம் என அவர்கள் உத்தரவாதம் அளித்துள்ளனர். வரும் 19ம் தேதி மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிகிறது.

இந்நிலையில் திமுக தலைவரும், கூட்டணி கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து இன்று (17ம் தேதி) மாலை பிரசாரம் செய்கிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளோம். சாரம் தென்றல் நகரில் அவர் பிரசாரத்தை ஆரம்பித்து 4 இடங்களில் பிரசாரம் செய்கிறார். இதன்மூலம் ஜான்குமார் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. அவர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். எனவே புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இடைத்தேர்தல் தேதி அறிவித்த உடனே நாங்குநேரி, புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி ஆகிய இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் என மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து வேட்பாளருடன் ஆசிபெற சென்றபோது நாங்கள் கோரிக்கை வைப்பதற்கு முன்பாகவே 17ம் தேதி பரப்புரை செய்ய புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்கு வருவதாக உறுதியளித்தார். மேலும் வேட்பாளருக்கு ஆசி வழங்கி, அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற, எனது இயக்கத்தினர் முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் எனவும் தெரிவித்தார். இதற்கான தேர்தல் பணிக்குழுவையும் உடனடியாக அமைத்தார். புதுச்சேரி வரும் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/XoXJyQAA

📲 Get Puducherrynews on Whatsapp 💬