கிருஷ்ணகிரியில் 500 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

  |   Krishnagirinews

கிருஷ்ணகிரி, அக்.17: கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிளாஸ்டிக் உபயோகித்த கடைகளுக்கு ₹52 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரியில் நகராட்சி ஆணையாளர்(பொ) சிசில்தாமஸ் தலைமையில் நகராட்சி ஆய்வாளர்கள் செந்தில்குமார், சந்திரக்குமார், குமார், மேற்பார்வையாளர்கள் சரவணன், எஸ்.சரவணன், ராஜா ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கிருஷ்ணகிரி சப்-ஜெயில் சாலையில் உள்ள ஓட்டல்கள், கடைகளில் ஆய்வு செய்தபோது, தடை செய்யப்பட்ட பேப்பர் கப்புகள், கவர்கள் உள்ளிட்ட 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். பிளாஸ்டிக் உபயோகித்த கடைகளுக்கு ₹52 ஆயிரம் அபராதம் விதித்தனர். அப்போது, சேலம் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் குடோனில் பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக ஆணையருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் வணிக வளாகத்தில் ஆய்வு செய்தபோது குடோன் பூட்டப்பட்டிருந்தது. இதனால், சந்தேகமடைந்த அவர்கள் கடைக்கு சீல் வைத்தனர். ஆய்வு குறித்து நகராட்சி ஆணையர் கூறுகையில், குடோனில் பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்துள்ளதாக தகவல் கிடைத்தது. ஆனால் கடை பூட்டப்பட்டு இருந்ததால் ஆய்வு மேற்கொள்ள முடியவில்லை. கடைக்கு சீல் வைத்துள்ளோம். கடையின் உரிமையாளர், நகராட்சியை தொடர்பு கொண்டு எங்கள் முன்னிலையில் தான் கடையை திறக்க வேண்டும் என்றார்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/hPyNkAAA

📲 Get Krishnagirinews on Whatsapp 💬