தண்டவாள கொக்கிகளை திருடிச் சென்ற வழக்கில் துப்பு கிடைக்காமல் ஆர்பிஎப் போலீசார் திணறல்

  |   Salemnews

சேலம், அக். 17: ஆத்தூர் அருகே தண்டவாள கொக்கிகளை திருடிச் சென்ற வழக்கில், துப்பு கிடைக்காமல் ஆர்பிஎப் போலீசார் திணறி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள காட்டுகோட்டை கிராமத்தின் வழியே சேலம்-விருத்தாச்சலம் ரயில்வே தண்டவாளம் செல்கிறது. கடந்த வாரத்தில், தண்டவாளத்தில் மாட்டப்பட்டிருந்த 40 கொக்கிகளை மர்மநபர்கள் கழற்றிச் சென்றனர். இதனை பார்த்த ரயில்வே ஊழியர்கள், உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதனால், அடுத்த ரயில்கள் வருவதற்குள் கொக்கிகள் கழற்றப்பட்ட இடங்களில் ஆய்வை முடித்துவிட்டு, புதிய கொக்கிகளை ஊழியர்கள் பொருத்தினர்.இதுபற்றி சேலம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், தமிழக ரயில்வே போலீசாரும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆர்பிஎப் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தண்டவாள கொக்கிகள் அனைத்தும், இரும்பு திருடர்களால் கழற்றி செல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், உத்திரபிரதேசத்தை சேர்ந்த ஒரு வாலிபர், தண்டவாள பகுதியில் சுற்றித்திரிந்தபோது பிடிபட்டார். அவரிடம் 2 கொக்கிகள் இருந்தன. ஆனால், அவர் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் எனத்தெரியவந்தது. இதையடுத்து அவரை ஆர்பிஎப் போலீசார் விடுவித்தனர்.கொக்கிகள் கழற்றப்பட்ட இடம் அருகே உள்ள சேகோ ஆலையில் திருடர்கள் வந்து செல்லும் வீடியோ காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தது. அதனை கைப்பற்றி விசாரித்தனர். அதில், திருடர்களின் உருவம் சரியாக தெரியவில்லை. இதையடுத்து இந்த வழக்கில் துப்பு கிடைக்ககாமல் ஆர்பிஎப் போலீசார், கொக்கிகளை கழற்றி சென்றவர்களை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். தொடர்ந்து, சின்ன சேலம், கள்ளக்குறிச்சியில் உள்ள பழைய இரும்பு கடைகளில் சோதனை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/TMK_tQAA

📲 Get Salemnews on Whatsapp 💬