நவீனமயமாகும் சின்னசேலம் ரயில் நிலையம்

  |   Viluppuramnews

சின்னசேலம், அக். 17: சின்னசேலம் ரயில்நிலையம் நவீனமயமாகி வருவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சின்னசேலம் நகரின் மையப்பகுதியில் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து சேலம், பெங்களூரு, விருத்தாசலம், காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு ரயில்கள் சென்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் சென்னை போன்ற பெருநகரங்களுக்கும் சென்று வருகிறது. கடந்த காலங்களில் இந்த ரயில் நிலையத்தில் நடைமேம்பாலம் இல்லாததால் ரயிலில் இருந்து இறங்கி வரும் பயணிகள் தண்டவாளத்தை கடந்துதான் சென்றனர். அதைப்போல இரண்டாவது நடைமேடையில் மேற்கூரை இல்லாததால் மழை காலங்களில் நனைந்தவாறே ரயிலுக்கு காத்திருந்து ரயிலில் ஏறி சென்றனர். எனவே சின்னசேலம் ரயில் நிலையத்தில் நடைமேம்பாலம் கட்ட வேண்டும். ரயில் பயணிகள் காத்திருக்கும் நடைமேடைகளில் மேற்கூரை அமைத்து தருவதுடன், தரைதளத்தை நவீனமாக்கி தரவேண்டும் என்றும் பொதுநல ஆர்வலர்கள் உள்ளிட்ட ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். முன்னாள் மத்திய அமைச்சர்கள் வேங்கடபதி, வேலு, மூர்த்தி உள்ளிட்டோரிடமும் மனு கொடுத்து வந்தனர்.

இதையடுத்து சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் மற்றும் சென்னை மண்டல அதிகாரிகள் ஆகியோர் சின்னசேலம் ரயில் நிலையத்தை பார்வையிட்டனர். இதையடுத்து ரயில் பயணிகள் நலன்கருதி கடந்த 6 மாதங்களுக்கு முன் நடைமேம்பாலம் கட்டும்பணி துவங்கி முடிவுறும் நிலையில் உள்ளது. அதைப்போல இரண்டாம் நடைமேடையில் மேற்கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் நடைமேடையில் வண்ண வண்ண கற்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் சின்னசேலம் ரயில் நிலையத்தில் பயணிகள் நலன்கருதி கழிப்பறையும் கட்டி வருகின்றனர். மொத்தத்தில் சின்னசேலம் ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் பணி கடந்த 6 மாத காலமாக தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/FqmbFwAA

📲 Get Viluppuramnews on Whatsapp 💬