பள்ளிபாளையம் அருகே விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி

  |   Namakkalnews

பள்ளிபாளையம்,அக்.17: பள்ளிபாளையம் அருகே விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. பள்ளிபாளையம் அருகே உள்ள காடச்சநல்லூரில், விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. வேளாண்மை உதவி அலுவலர் அசோக்குமார் பயிற்சியை துவக்கி வைத்து பேசினார். அட்மா திட்ட மேலாளர் ஹேமலதா, விவசாயி பொன்சங்கர் ஆகியோர் தேனீக்களை வளர்ப்பது குறித்து பயிற்சியளித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தேனீக்கள்தான் நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பெரும் பங்காற்றி வருகிறது. இந்த ஈக்கள் இல்லாவிட்டால் மலர்களின் மகரந்த சேர்க்கைக்கு வாய்ப்பு குறைந்து நாட்டில் பசுமை மறைந்து போகும். மலர் விட்டு மலர் சென்று தேனை சேகரிக்கும் இந்த ஈக்களால், விவசாய விளை பொருட்களின் உற்பத்தி இருமடங்காக உயர்கிறது. காடு, தோட்டங்களில் இருந்த தேனீக்களை அழிக்கும் காலம் மாறி உலக அளவில் தேனீக்களை வளர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் வீடுகள், தோட்டங்களில் தேன் பெட்டிகளை வைத்து தேனீக்களை பாதுகாத்து, சுத்தமான தேன் சேகரித்து விற்பனை செய்யலாம். தேனீக்கள் 5கிலோ மீட்டர் வரை பறந்து சென்று, தனது இனத்திற்கான தேன்களை சேகரித்து பாதுகாக்கிறது. தேன் பெட்டிகளில் இருந்து தேன் தவிர, மகரந்தம், தேன்மெழுகு உள்ளிட்ட பொருட்களையும் பெறலாம் என விளக்கமளிக்கப்பட்டது. பயிற்சி வகுப்பில் நாமக்கல் பிஜிபி வேளாண்மை கல்லூரி மாணவர்கள், பள்ளிபாளையம் வேளாண்மை அலுவலர்கள், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/y70bVwAA

📲 Get Namakkalnews on Whatsapp 💬