மணல் கொள்ளை தடுக்க முயன்றபோது தலைமை காவலரை கொல்ல முயற்சி

  |   Tiruvallurnews

பள்ளிப்பட்டு, அக். 17: ஆர்.கே.பேட்டை அருகே, மணல் கொள்ளை தடுக்க முயன்ற தலைமை காவலர் மீது டிராக்டர் ஏற்றி கொலை செய்ய முயற்சித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் போதிய மழை இல்லாத நிலையில் கடும் வறட்சி நிலவுகின்றது. இதனால், குடிநீருக்கு பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் உள்ள ஆறுகளிலிருந்து இரவு நேரங்களில், அதிக அளவில் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருவதால் நீராதாரம் வெகுவாக பாதிக்கப்படுவதாக பொதுமக்களிடையே குற்றச்சாட்டு உள்ளது. இருப்பினும், மணல் கொள்ளை தடுத்து நிறுத்த காவல் துறையினர் மெத்தனம் காட்டி வருவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், ஆர்.கே.பேட்டை அடுத்த வெடியங்காடு சாலையில் தலைமை காவலர் லிங்கப்பன் சோளிங்கர் - சித்தூர் பிரதான சாலையில் ரோந்து பணியில் இருந்தார். அப்போது, அவ்வழியாக, மணல் ஏற்றிக் கொண்டு வந்த டிராக்டரை நிறுத்த முயற்சித்தார். அப்போது டிராக்டரை ஏற்றி அவரை கொலை செய்ய டிரைவர் முயன்றதாக கூறப்படுகிறது. சாதுர்யமாக செயல்பட்ட தலைமை காவலர், சாலையிலிருந்து நகர்ந்து விட்டார். உடனடியாக அங்கிருந்த சக காவலர்கள், டிராக்டர் டிரைவரை பின் தொடர வேகமாக சென்று விட்டார். இருப்பினும், டிராக்டருடன் இருசக்கர வாகனத்தில் வந்த கீரைசாத்து பகுதியைச் சேர்ந்த சாந்தகுமார் (23), ராஜசேகர் (23) ஆகிய இரு வாலிபர்களை கைது செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். மேலும், தப்பி ஓடிய டிராக்டர் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். மணல் கொள்ளை தடுக்க முயன்ற காவலர் மீது டிராக்டர் ஏற்றி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/SoP4QgAA

📲 Get Tiruvallurnews on Whatsapp 💬