மாமல்லபுரத்தில் பழமை வாய்ந்த கங்கை கொண்டான் மண்டப சுவர் இடிந்து விபத்து

  |   Tiruvallurnews

சென்னை, அக். 17: மாமல்லபுரத்தில் பழமை வாய்ந்த கங்கை கொண்டான் மண்டபத்தின் சுவர் இடிந்து விழுந்தது.மாமல்லபுரத்தில் 7ம் நூற்றாண்டுக்கு முன்பு பழங்கால கற்களால் கட்டப்பட்ட கங்கை கொண்டான் மண்டபம், மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ளது. மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் 10 நாள் சித்திரை திருவிழாவின்போது, சுவாமிகள் 4 மாடவீதிகளில் தினமும் காலை, மாலை வேளைகளில் கருட வாகனம், சேஷ வாகனம், அம்ச வாகனம், சூரிய பிரபை, சந்திரபிரபை ஆகியவைகளில் உலாவரும்போது, இங்கு இறக்கி வைத்து இளைப்பாறுதல் நடக்கும்.இந்நிலையில், மாமல்லபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து கொண்டு இருந்தது. இதைதொடர்ந்து நேற்று அதிகாலையில், கங்கை கொண்டான் மண்டபத்தின் ஒரு பகுதி திடீரென பெயர்ந்து விழுந்தது. அதிகாலை நேரம் என்பதால் யாருக்கும் எவ்வித காயமும் இல்லை.

தகவலறிந்து பேரூராட்சி அதிகாரிகள், தொல்லியல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர், அங்கு இடிந்து விழுந்த இடிபாடுகளை உடனடியாக அகற்றினர். தொடர்ந்து மண்டபத்தை ஆய்வு செய்தபோது, மண்டபத்தின் சில பகுதிகளிலும் விரிசல் ஏற்பட்டு எப்போது பெயர்ந்து விழுமோ என்ற நிலையில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள், அங்கிருந்து சென்றனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/PYTI1AAA

📲 Get Tiruvallurnews on Whatsapp 💬