வேதாரண்யம் விவசாயிகள் தீவிரம் சாலை அமைக்கும்போது வீரசோழன் ஆற்றில் உடைக்கப்பட்ட மதகை உடனே சீரமைக்க வேண்டும்

  |   Nagapattinamnews

தரங்கம்பாடி, அக்.17: பொறையார் அருகே வீரசோழன் ஆற்றுக்கரையில் சாலை அமைக்கும் போது உடைக்கப்பட்ட தடுப்பு பலகையுடன் உள்ள மதகை உடனே கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாகை மாவட்டம், பொறையார் பக்கம் உள்ள காட்டுச்சேரி பட்டாபுரம் கிராமத்தில் வீரசோழன் ஆற்றுக்கரையில் வடிகால் வாய்க்கால் உள்ளது. அங்கு தடுப்பு பலகையுடன் கூடிய மதகு கட்டப்பட்டிருந்தது. மண் சாலை அமைக்கும் பணி நடந்த போது தடுப்பலகையுடன் கூடிய மதகை உடைத்து விட்டனர். சாலை போட்ட பின்பு அதை புதிதாக போடாமல் தண்ணீர் செல்லும் குழாய் மட்டும் பதித்துவிட்டு சென்று விட்டனர். இதனால் மழை அதிகம் பெய்யும் பொழுதும், வீரசோழன் ஆற்றில் அதிக தண்ணீர் வரும் பொழுதும் குழாய் வழியாக தடையின்றி தண்ணீர் புகுந்து வடிகால் வாய்க்கால் வழியாக 100க்கும் மேற்பட்ட சாகுபடி வயல்களில் வௌ்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து விவசாயி ரத்தினகுமார் கூறியதாவது, வீரசோழன் ஆற்றுக்கரையில் பொதுப்பணித் துறையினர் சாலை அமைக்கும் போது அங்கிருந்த தடுப்பலகையுடன் கூடிய மதகை உடைக்கப்பட்டுள்ளது. அதன்பின் அந்த மதகு கட்டப்படவில்லை. தண்ணீர் செல்ல குழாய் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறை அதை கட்டுப்பணி எங்களது அல்ல என்று கூறிவிட்டனர். செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தபோது கட்டித் தருவதாக கூறினார்கள். ஒரு மாதம் ஆகியும் இன்னும் கட்டப்படவில்லை. மழைக் காலம் வருவதால் ஆற்றில் தண்ணீர் அதிகம் வரும். அப்போது 100க்கும் மேற்பட்ட சாகுபடி நிலங்களில் தண்ணீர் புகுந்து வௌ்ளம் ஏற்படும் என்ற அச்சத்தில் விவாசயிகள் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மதகை கட்டித்தர வேண்டும் என்று கூறினார்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/QPM8kQAA

📲 Get Nagapattinamnews on Whatsapp 💬