அமராவதி நகர் முதலை பண்ணையில் இரும்பு தடுப்புகள் அமைக்க கோரிக்கை

  |   Tiruppurnews

உடுமலை, அக். 9: அமராவதிநகர் முதலை பண்ணையில், உடைந்து விழுந்த இரும்பு தடுப்பு கம்பி முழுமையாக அமைக்கப்படாததால், சுற்றுலா பயணிகள் பீதியுடன் முதலைகளை பார்த்து செல்கின்றனர். உடுமலை அமராவதி அணைக்கு அருகில், முதலை பண்ணை உள்ளது. வனத்துறையின் பராமரிப்பில் இந்த பண்ணை உள்ளது.இங்கு 4 அடி முதல் 16 அடி நீளம் வரை கொண்ட 98 முதலைகள் உள்ளன. ஒன்று முதல் 16 வயது, 16 முதல் 30 வயது, 30 முதல் 45 வயது என மூன்று பிரிவுகளாக முதலைகள் பிரிக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.பண்ணையில் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளிலும், மணல்வெளியிலும் முதலைகள் உலா வருகின்றன. அமராவதி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் முதலை பண்ணைக்கும் தவறாமல் வந்து செல்கின்றனர். இங்கு சிறியவர்களுக்கு ரூ.5, பெரியவர்களுக்கு ரூ.10, கேமராக்களுக்கு ரூ.50 என நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தற்போது ஆயுத பூஜை விடுமுறை என்பதால், கடந்த இரு தினங்களாக முதலை பண்ணைக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.இவற்றை சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் பார்வையிடும் வகையில், தடுப்பு சுவர்கள் மற்றும் கிரில் கம்பிகள் அமைக்கப்பட்டிருந்தன. சுமார் 4 அடி உயரத்துக்கு சுவர் எழுப்பி, அதன்மேல் இரும்பு தடுப்பு கம்பிகள் அமைத்து, பொதுமக்கள் பார்வையிடும் நிலையில் இருந்தது. சமீபத்தில் இந்த கம்பிகள் சேதமடைந்து விழுந்தன. இதனால் ஒருபுறம் தடுப்பு கம்பியும், இன்னொரு புறத்தில் கம்பிகள் இல்லாத நிலையும் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பீதியுடன் முதலைகளை பார்த்து செல்கின்றனர்.ஊழியர்கள் அங்கு கண்காணிப்பில் இருந்தாலும், உடனடியாக மீதமுள்ள பகுதியிலும் தடுப்பு கம்பி அமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/qGjziwAA

📲 Get Tiruppurnews on Whatsapp 💬