அறந்தாங்கியில் பழங்கற்கால கற்கோடாரி கண்டெடுப்பு

  |   Pudukkottainews

அறந்தாங்கி, அக்.9: அறந்தாங்கி அருகே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சுடுமண் பானைகள் கிடைத்த இடத்தில் தற்போது கல் கோடாரி கிடைத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் ராமசாமிபுரம், தஞ்சை மாவட்டம் மணக்காடு ஆகிய கிராமங்களுக்கு இடையே வில்லுன்னி ஆற்றங்கரையில் 173 ஏக்கர் பரப்பளவில் உள்ளது அம்பலத்திடல். இங்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் ஆடு மேய்க்க சென்ற சிறுவர்கள் ஆங்காங்கே பானைகள் புதைக்கப்பட்டிருப்பதை பார்த்து தோண்டி பார்த்தபோது அவை முதுமக்கள் தாழிகளாக இருந்தது. அவற்றில் பல சிறு கருப்பு சிவப்பு பானைகளும் குடுவைகளும் கண்டெடுக்கப்பட்டது. இதையறிந்த புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தினர் ஆய்வு செய்தபோது பல் போன்ற எலும்பு துண்டுகளும் பானை ஓடுகளில் குறியீடுகளும் காணப்பட்டது. அவற்றை வைத்து இப்பகுதியில் வன்னி மரங்கள் அடர்ந்திருப்பதால் போர் வீரர்களின் புதைவிடங்களாக இருக்கலாம் என்றும் சுமார் 3 ஆண்டுகளுக்கு முந்தைய குறியீடுகள் உள்ளன என்றும் கூறினர்.

தற்போதும் அதே ஆய்வுக் கழகத்தை சேர்ந்தவர்கள் மறு ஆய்வுக்காக சென்ற போது பழங்கற்கால கற்கோடாரி கண்டெடுத்துள்ளனர். கற்கோடாரி அதனால் கீழடிக்கு முந்தைய காலமாக உள்ளது என்றும் அதனால் அரசு அகழாய்வு செய்ய வேண்டும் என்றும் கூறுகின்றனர். இந்த ஆய்வின் போது உடன் இருந்த அறந்தாங்கி தாசில்தார் சூரிய பிரபுவிடம் தொல்லியல் மன்றத்தினர் கல் கோடாரியை ஒப்படைத்தனர். மதுரை மாவட்டம் கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வினைப் போன்று அறந்தாங்கியை அடுத்த பாலகிருஷ்ணாபுரம் அம்பலத்திடலில் நடத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாகும்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/hahS8AAA

📲 Get Pudukkottainews on Whatsapp 💬