ஆரணி கிளைச் சிறை திறக்கப்படாமல் பணியிட மாற்றம் பெற்றும் வேலூரிலேயே பணியாற்றும் சிறைக்காவலர்கள்

  |   Vellorenews

வேலூர், அக்.9: ஆரணியில் புதுப்பிக்கப்பட்ட கிளைச்சிறை திறக்கப்படாததால் பணியிட மாற்றம் பெற்றும் அங்கு செல்ல இயலாமல் வேலூரிலேயே பணியாற்றி வருவதாக சிறைக்காவலர்கள் 15 பேர் வேதனை தெரிவிக்கின்றனர்.

வேலூரில் 150 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட மத்திய சிறையின் கட்டுப்பாட்டில் ஆரணி, போளூர், திருவண்ணாமலை, ஆம்பூர் உட்பட 11 கிளைச்சிறைகள் உள்ளன. ஆரணியில் நூற்றாண்டுகளை கடந்த கிளைச்சிறை கட்டிடம் பராமரிப்பின்றி பழுதடைந்ததால் அங்கிருந்த கைதிகள் அனைவரும் வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். இதையடுத்து கடந்த 2013ம் ஆண்டு ஆரணி கிளைச்சிறை மூடப்பட்டது. அங்கு தற்போது கிளை சிறை கண்காணிப்பாளர் ஒருவரும், உதவி ஆய்வாளர் நிலையில் சிறைத்துறை அதிகாரி ஒருவரும் பணியாற்றி வருகின்றனர்.

மற்றவர்கள் வேலூருக்கும் பிற இடங்களுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி ஆய்வின்போது ஆரணி கிளைச்சிறையை மராமத்துப்பணிகள் மேற்கொண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்பேரில், பொதுப்பணித்துறையின் சாரில் ஆரணி கிளைச்சிறை வளாகம் புதுப்பிக்கப்பட்டு டிசம்பரில் பணி முடிந்தது. பணி முடிந்த நிலையில் கட்டிடமும் சிறைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையில் ஆரணி கிளைச் சிறை திறக்கப்படும் என்ற நிலையில் வேலூரில் பணியாற்றி வந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சிறைத்துறை அதிகாரிகள், சிறைக்காவலர்கள் என 15 பேருக்கு ஆரணிக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டது. ஆனால் பணியிட மாற்றல் உத்தரவு வழங்கப்பட்டு பல மாதங்கள் கடந்தும் அவர்கள் இன்னமும் வேலூர் மத்திய சிறையிலேயே பணியாற்றி வருகின்றனர். எனவே, ஆரணி கிளைச்சிறையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து பணியிட மாற்றம் பெற்றவர்களை அங்கு பணியாற்ற வழிவகை செய்ய வேண்டும் என்று சிறைக்காவலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/I4phAgAA

📲 Get Vellorenews on Whatsapp 💬