தொடர் கொள்ளை சம்பவம் எதிரொலி போலீசார் தீவிர ரோந்து பணி

  |   Puducherrynews

திருக்கனூர், அக். 9: திருக்கனூர் பகுதியில் அடுத்தடுத்த கொள்ளை சம்பவங்களை தொடர்ந்து போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது சந்தேக நபர்களை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருக்கனூர் அருகே மண்ணாடிப்பட்டில் கடந்த 5 நாட்களுக்கு முன் ஓய்வு பெற்ற மில் ஊழியர் சுந்தர்ராஜ் வீட்டிலும், பச்சையப்பன் என்பவர் வீட்டிலும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அதனை தொடர்ந்து மணலிப்பட்டை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் வீட்டில் நள்ளிரவில் புகுந்து 2 பவுன் தாலி செயினை பறித்து சென்றனர். அவரது வீட்டின் அருகில் உள்ள சடகோபன் என்பவர் வீட்டில் நுழைந்து 2 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மேற்கு எஸ்பி ரங்கநாதன் உத்தரவின் பேரில் திருக்கனூர் இன்ஸ்பெக்டர் கண்ணன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், முருகானந்தம் தலைமையில் 2 தனிப்படை அமைத்து புதுச்சேரி-தமிழக எல்லை பகுதியில் இரவு நேர வாகன சோதனை மற்றும் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் சந்தேகப்படும்படி யாராவது வந்தால் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த கொள்ளையர்கள் குறித்த விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் நேற்று முன்தினம் இரவு மணலிப்பட்டு சங்கராபரணி ஆற்றுப் பகுதியில் திருக்கனூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், காட்டேரிக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். எல்லை பகுதியிலும் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/wJkA5AAA

📲 Get Puducherrynews on Whatsapp 💬