வேலூர் சிறையில் முருகனை சந்திக்க நளினிக்கு அனுமதி: சிறைத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

  |   Chennainews

சென்னை: வேலூர் சிறையில் உள்ள முருகனை சந்திக்க நளினிக்கு அனுமதி வழங்க சிறைத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் சமீபத்தில் தனிமை சிறைக்கு மாற்றப்பட்டார். இதனை கண்டித்து அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டதால் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்க வேண்டும். மேலும் அவருடைய மனைவி நளினி மற்றும் உறவினர்களை பார்க்க அனுமதிக்க கோரியும், தனிமை சிறையில் உள்ள முருகனை சாதாரணமான சிறையில் மாற்ற கோரியும் அவரது உறவினர் தேன்மொழி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் எம். சுந்தரேஷ் மற்றும் சீதாராமன் அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. அச்சமயம் சிறைத்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் பதில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

அதில் முருகன் வைக்கப்பட்டிருந்த பிளாக் 1 சிறையில் கடந்த அக்டோபர் 18 மற்றும் நவம்பர் 19ம் தேதிகளில் சிறைத்துறை நடத்திய சோதனைகளில் அவரது அறையிலிருந்து செல்போன், சார்ஜர், கத்தி உள்ளிட்ட 13 பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சிறைவிதிகளை மீறி தடைசெய்யப்பட்ட பொருட்களை வைத்திருந்ததின் காரணமாக 3 மாதங்களுக்கு முருகனை யாரும் சந்திக்க கூடாது என தண்டனை வழங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல முருகன் தனிமை சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது என்றும் செல்போன் ஜாமர் கருவி பொருத்தப்பட்டுள்ள பிளாக் 2 சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பு குற்றவியல் வழக்கறிஞர் தனது வாதத்தில் தெரிவித்தார். இதையடுத்து முருகனுக்கு வழங்கப்பட்டுள்ள 3 மாத தண்டனையை திருப்ப பெற்றுக் கொள்ள சிறைத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், முருகன் அவருடைய மனைவி நளினி மற்றும் உறவினர்களை பார்க்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் முருகனை வேறு பிளாக்கிற்கு மாற்றுவது தொடர்பாக நிர்வாக உத்தரவில் தாங்கள் தலையிட முடியாது என்று நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.

போட்டோ - http://v.duta.us/vp_8iwEA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/607psgAA

📲 Get Chennainews on Whatsapp 💬