[tamil-nadu] - ஒகேனக்கல் சாலையை கடந்த யானை கூட்டம் : சுற்றுலா பயணிகள் பீதி

பென்னாகரம்: ஒகேனக்கல் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள், சாலையை கூட்டமாக கடந்து செல்வதால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக 50க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டு சுற்றித்திரிகின்றன. வறட்சி காரணமாக, யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியையொட்டியுள்ள கிராமங்களுக்குள் நுழைவது அடிக்கடி நடந்து வருகிறது. ஒகேனக்கல் அருகே பண்ணப்பட்டி பகுதியில், தண்ணீர் குடிப்பதற்காக யானைகள் சாலையை கடக்க வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில், ஒகேனக்கல் வனப்பகுதியையொட்டியுள்ள சின்ன ஆஞ்சநேயர் கோயில் பகுதியில், 6க்கும் மேற்பட்ட யானைகள், குட்டிகளுடன் ஒகேனக்கல் பென்னாகரம் சாலையை நேற்று கடந்து சென்றன. இதனை கண்ட வாகன ஓட்டிகள், அச்சத்துடன் வாகனங்களை நிறுத்தி விட்டு, யானைகள் சாலையை கடக்கும் வரை காத்திருந்தனர். அப்போது, ஒருசிலர் யானைகளை தங்கள் செல்போனில் புகைப்படம் பிடித்தனர். ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித்திரியும் யானைகளை கண்காணிக்கவும், சுற்றுலா பயணிகளால் யானைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போட்டோ - http://v.duta.us/WFbszgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/-AHe7AAA