[tamil-nadu] - அங்காளம்மன் கோயில் விழாவில் பக்தர்களுக்கு மிளகாய் கரைசல் அபிஷேகம்

காலாப்பட்டு: புதுவை காலாப்பட்டு அடுத்த ஆலங்குப்பம் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் மயானக்கொள்ளை நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும். அப்போது ஆரோவில் அடுத்த இடையன்சாவடி பகுதியில் நடைபெறுவது போல பக்தர்களுக்கு மிளகாய் கரைசல் அபிஷேகம் செய்யும் விநோத வழிபாடு நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான மயானக்கொள்ளை நிகழ்ச்சி ஆலங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து 3ம் தேதி அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், பொங்கல் வைப்பு நிகழ்ச்சியும் நடந்தது.

இதையடுத்து நேற்று காலை 3 பக்தர்களுக்கு பால், தயிர், எலுமிச்சம்பழம், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து அவர்களுக்கு அங்குள்ள பூசாரிகள் மிளகாய்தூளை கரைத்து, ஊற்றி அபிஷேகம் செய்தனர். சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். இதை தொடர்ந்து கோயிலில் விளக்கு பூஜையும், பரமசிவன் பார்வதி வேடமணிந்த பக்தர்களின் ஊர்வலமும் நடந்தது. முக்கிய நிகழ்வான மயானகொள்ளை நிகழ்ச்சி நாளை(6ம்தேதி) நடக்கிறது. ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள், பொதுமக்கள் செய்துள்ளனர்.

போட்டோ - http://v.duta.us/4QpdBwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/FKZHFwAA