[namakkal] - வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் அதிமுக பிரமுகரிடம் ₹2.45 லட்சம் சிக்கியது

  |   Namakkalnews

சேந்தமங்கலம், ஏப்.16: சேந்தமங்கலம் அடுத்த எருமப்பட்டியில் அதிமுக பிரமுகரிடம், பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய வைத்திருந்த ₹2.45 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்துள்ள எருமப்பட்டி பேரூராட்சியில், பணம் பதுக்கி வைத்து வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதாக, வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து, 5 பேர் கொண்ட வருமான வரித்துறையினர், எருமப்பட்டி பேரூராட்சி அதிமுக செயலாளரும், முன்னாள் பேரூராட்சி தலைவருமான மெடிக்கல் பாலுசாமி(60) என்பவரது வீடு மற்றும் கடையில் நேற்று மதியம் 2 மணியளவில் சோதனை நடத்தினர்.

சோதனையில் வீட்டில் பணம் எதுவும் சிக்காத நிலையில், தொடர்ந்து, அவருக்கு சொந்தமான மெடிக்கல்லில் சோதனை நடத்தியதில் அங்கு பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், கணக்கில் வராத ₹2.45 லட்சத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில், வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ய வைத்திருப்பது தெரியவந்ததால், பறக்கும்படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன் தலைமையிலான அலுவலர்கள் அங்கு வந்து, ₹2 லட்சத்து 45,630 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். அந்த பணத்தை சேந்தமங்கலம் தாசில்தார் செந்தில்குமார் முன்னிலையில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் துரையிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/D7hyDwAA

📲 Get Namakkalnews on Whatsapp 💬