[perambalur] - வாக்குச்சாவடி மையங்களுக்குள் வாக்காளர்கள் செல்போன் எடுத்து செல்லக்கூடாது

  |   Perambalurnews

அரியலூர், ஏப். 16: வாக்குச்சாவடி மையங்களுக்குள் வாக்களிக்க செல்லும்போது வாக்காளர்கள் செல்போன் எடுத்து செல்லக்கூடாது என்று அரியலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் விஜயலட்சுமி உத்தரவிட்டார். சிதம்பரம் மக்களவை தேர்தலையொட்டி கடந்த மாதம் 10ம் தேதி முதல் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு வகையான தேர்தல் தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் 18ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவுகள் நடக்கிறது. இதையொட்டி இன்று மாலையுடன் தேர்தல் தொடர்பான பிரசாரம் முடிவடைகிறது. இன்று மாலை 6 மணி முதல் பிரசாரம் ஓய்கிறது. இதையொட்டி இன்று மாலை 6 மணிக்கு பிறகு தொகுதிக்கு உட்பட்டவர்கள் தவிர வெளியூரை சேர்ந்தவர்கள் யாரும் தங்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் விடுதிகள், மண்டபங்கள் உட்பட பல்வேறு இடங்களில் தேர்தல் தொடர்பாக வெளியூர்களை சேர்ந்தவர்கள் யாரேனும் தங்கியுள்ளார்களா என்பதை கண்காணிக்க காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்காளர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்குள் செல்போன் மற்றும் கேமரா போன்ற மின்னணு சாதனைங்களை எடுத்து செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க செல்லும்போது செல்போன்களை எடுத்து செல்லக்கூடாது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வுதளம், உதவியாளருடன் கூடிய சக்கர நாற்காலி வசதி, பார்வை குறைபாடு உடையவர் வாக்களிக்க தன்னுடன் ஒரு உதவியாளரை அழைத்து செல்லும் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கும், மூத்த குடிமக்கள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் வாக்களிப்பதில் முன்னுரிமையும், ஆண், பெண் வாக்காளர்களுக்கென தனித்தனி வரிசைகள் அமைக்கப்படும். இவ்வரிசையில் வரும் வாக்காளர்களில் ஒரு ஆண் வாக்காளர் வாக்களிக்க அனுமதிக்கப்படும்போது 2 பெண் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/nC8OvwAA

📲 Get Perambalurnews on Whatsapp 💬