[thiruvarur] - நாகை மக்களவை தொகுதியில் மீனவர் நலன், உப்பு உற்பத்திக்கு தனி கவனம் செலுத்தப்படும் அதிமுக வேட்பாளர் தாழை சரவணன் உறுதி

  |   Thiruvarurnews

திருவாரூர், ஏப். 16: நாகை தொகுதியில் ரயில் போக்குவரத்து அதிகரிக்கப்படும். மீனவர் நலன் மற்றும் உப்பு உற்பத்திக்கு தனிக்கவனம் செலுத்தப்படும் என அதிமுக வேட்பாளர் தாழை சரவணன் தெரிவித்துள்ளார்.

நாகை எம்பி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தாழை சரவணன் நேற்று நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியத்திற்குட்பட்ட பி.ஆர்.புரம், செருதூர், வேளாங்கண்ணி உட்பட பல்வேறு பகுதிகளில் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அந்த தொகுதியின் முக்கிய கோரிக்கைகளான திருவாரூர் காரைக்குடி ரயில் போக்குவரத்து சேவை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சேவையினை ராமேஸ்வரம் வரையில் நீட்டிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். நாகையிலிருந்து திருவாரூர் வழியாக சென்னைக்கு பகல் நேரங்களில் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் திருத்துறைப்பூண்டியிலிருந்து அகஸ்தியம்பள்ளி வரையிலான ரயில் போக்குவரத்து திட்டம் அமல்படுத்தப்படும். இப்பகுதியில் பெருநகரங்களை இணைக்கும் வகையில் ரயில் போக்குவரத்து அதிகரிக்கப்படும்.

தொலைத் தொடர்பு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அதன் ஊழியர்களின் நலன் பாதுகாக்கப்படும். நாகை முதல் கோடியக்கரை மற்றும் முத்துப்பேட்டை வரையிலான கடல் மீனவர் மற்றும் உள்நாட்டு மீனவர்களின் நலன் மற்றும் அவர்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தபபடும். உப்பு உற்பத்திக்கான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். நாகை, வேதாரண்யம், குடவாசல், வலங்கைமான் உட்பட இந்த நாடாளுமன்ற தொகுதியின் பல்வேறு இடங்களில் பயிர் செய்யப்படும் தோட்டப்பயிர்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருவாரூர், நாகை மாவட்டத்தின் முக்கியத் தொழிலான விவசாயத்தினை காப்பாற்றும் வகையில் இப்பகுதியினை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இந்த திட்டங்கள் நிறைவேறவும் தமிழக அரசின் திட்டங்கள் தொடர்ந்து கிடைப்பதற்கும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெற செய்யுமாறு கேட்டு கொள்வதாக தாழை சரவணன் தெரிவித்தார்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/GfGsKQAA

📲 Get Thiruvarurnews on Whatsapp 💬