[tamil-nadu] - கொடைக்கானலில் பாலப்பணி படுமந்தம் : சுற்றுலா பயணிகள் கடும் அவதி

கொடைக்கானல்: கொடைக்கானலில் பாலப் பணிகள் ஆமைவேகத்தில் நடந்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். கொடைக்கானலில் பைன் பாரஸ்ட், குணா குகை, தூண்பாறை, மோயர் பாயிண்ட் ஆகியவை முக்கிய சுற்றுலா தலங்களாகும். இப்பகுதிகளுக்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் சுமார் ரூ.50 லட்சம் செலவில் 2 பாலப் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது கொடைக்கானலில் கோடை சீசனாகும். இந்த சீசன் காலத்தில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவர். இப்பாலங்கள் கட்டும் பணியால் தொடர்ந்து இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

பாலங்கள் கட்டும் இடத்தில் குறுகலான சாலையில் மணிக்கணக்கில் காத்திருந்து செல்வதால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் அதிகளவு சுற்றுலா வாகனங்கள் இப்பகுதிக்கு வருவதால் கட்டுக்கடங்காத நெரிசல் ஏற்பட்டு விடுகிறது. எனவே பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது கூறியதாவது, ‘கடந்தாண்டு வெள்ள நிவாரண திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் செலவில் இப்பணி துவங்கப்பட்டது, 2 பாலப் பணிகளும் விரைவில் முடிக்கப்படும்’ என்றார்.

போட்டோ - http://v.duta.us/juZGoQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/MwTFqgAA