[tamil-nadu] - தமிழகமெங்கும் தேர்தல் பறக்கும்படையினர் அதிரடி சோதனை: இன்று மட்டும் சுமார் ரூ.6 லட்சம் ரொக்கம் பறிமுதல்

திருவண்ணாமலை: தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ஒரு லட்சத்து 38 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டில் ஆவின் பால் முகவர் கணேசன் கொண்டு சென்ற ரூ.2 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சேலம் மாவட்டம் சங்கரியில் கண்ணன் என்பவரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தானில் அதிமுக முன்னாள் கவுன்சிலரின் பண்ணை வீட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் அரசு பேருந்தில் பயணம் செய்த அழகு என்பவரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில், தமிழகத்தில் நேற்று மட்டும் தேர்தல் பறக்கும் படையினரால் சுமார் 2 கோடியே 23 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இதில் இதுவரை மொத்தமாக 80 கோடியே 35 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தகவல் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது, இதுவரை 132 கோடி ரூபாய் மதிப்பிலான 468 கிலோ தங்கம், ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான 414 கிலோ வெள்ளி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

போட்டோ - http://v.duta.us/ELkK6wAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/lOScbwAA