[tamil-nadu] - கொடைக்கானலில் ரூ.10 கோடியில் புதிய குடிநீர் திட்டம் : அண்ணா பல்கலை மாணவர்கள் ஆய்வு

கொடைக்கானல் : கொடைக்கானல் குடிநீர் தேக்கத்தை மேம்படுத்துவதற்கு அண்ணா பல்கலைக்கழக குழுவினர் ஆய்வு செய்தனர். கொடைக்கானலில் நகரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய ஆங்கிலேயர் காலத்தில் நீர்தேக்கமும், மனோகர் ரத்தினம் சோலை அணையும் அமைக்கப்பட்டது. இந்த இரண்டு நீர் தேக்கங்களில் இருந்து தான் கொடைக்கானல் நகரத்தில் உள்ள 24 வார்டுகளிலும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. மழை காலத்தில் குடிநீர் வினியோகத்தில் சிரமம் இருக்காது. ஆனால் வறட்சியான காலங்களில் குடிநீர் விநியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டு வருகின்றது.

இதையடுத்து புதிதாக குடிநீர் தேக்கம் அமைப்பதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலெக்டர் வினய் பரிந்துரைப்படி இதற்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதை அடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பொறியாளர்கள் மயில்சாமி தலைமையிலான குழுவினர் கொடைக்கானல் குடிநீர் தேக்க பகுதிகளை ஆய்வு செய்தனர்.

புதிதாக தடுப்பணைகள் கட்டலாமா அல்லது பழைய நீர்தேக்கத்தின் கரைகளை உயர்த்தி அதன் கொள்ளளவை அதிகப்படுத்தலாமா என்பது பற்றிய ஆய்வினை இந்த குழுவினர் மேற்கொண்டனர். இதுபற்றி கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் முருகேசன் கூறுகையில், தமிழக அரசு கொடைக்கானலில் குடிநீர் மேம்பாட்டு பணிகளை செய்வதற்கு 10 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இதற்காக அண்ணா பல்கலைக்கழக பொறியாளர் குழுவினர் ஆய்வு செய்தனர். இவர்களது ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் கலெக்டரின் ஒப்புதலுடன் பணி தொடங்கப்படும்’’ என்றார்.

போட்டோ - http://v.duta.us/XPpXXwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/S1jHYgAA