[tamil-nadu] - கோர்ட்டை விமர்சித்தவருக்கு 3 மாதம் சிறை தண்டனை

மதுரை: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர், மம்சாபுரத்தை சேர்ந்தவர் மனோகரன். இவருக்கும், அப்பகுதி ராணுவ வீரரான அங்கணன் குடும்பத்தினருக்கும் இடப்பிரச்னை இருந்தது. அங்கணன் வீட்டு குடும்ப பெண்களிடம் மனோகரன் தகராறில் ஈடுபட்டார். இவ்வழக்கில் மனோகரனுக்கு ராஜபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. அதனை எதிர்த்து, திருவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் மனோகரன் வழக்கு தொடர்ந்தார்.பின்னர் அவ்வழக்கு தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். ‘அந்த மனு ஏற்புடையது அல்ல’ என ஐகோர்ட் பதிவுத்துறை அலுவலர்கள் நிராகரித்தனர். எனவே, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் நீதிமன்ற நீதிபதிகள், ஐகோர்ட் கிளை பதிவுத்துறை அலுவலர்களை விமர்சித்து ஜனாதிபதி, பிரதமர், ஐகோர்ட் கிளை பதிவாளருக்கு மனோகரன் கடிதம் அனுப்பினார்.

இதனால் மனோகரனுக்கு எதிராக ஐகோர்ட் கிளை பதிவாளர் (நீதித்துறை) மனு செய்தார். இதனை ஐகோர்ட் கிளை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் தானாக முன்வந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்காக விசாரித்து, ‘‘நீதிமன்றங்கள் கூட்டுக்குடும்பம் போன்றவை. கீழமை நீதிமன்ற நீதிபதிகளை பாதுகாக்க வேண்டியது இந்த நீதிமன்றத்தின் கடமை. மனோகரன் தன் தவறை நியாயப்படுத்துகிறார். இதனால் அவருக்கு 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. அவருக்கு ரத்த அழுத்த பிரச்னை இருப்பதால், வெங்காயம் இல்லாத உணவு, பால் வழங்க சிறை நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

போட்டோ - http://v.duta.us/16kJSAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/_XJtQQAA