[tamil-nadu] - செம்பட்டி அருகே கூலம்பட்டியில் கட்டிய தரைப்பாலத்தை புதிதாக கட்டியதாக ரூ.2 லட்சம் ஏப்பம்

செம்பட்டி: ஏற்கனவே கட்டிய பாலத்தை கட்டியதாக ரூ.2 லட்சத்தை ஏப்பம்விட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூலம்பட்டி மக்கள் கலெக்டருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர். செம்பட்டி அருகே பாளையன்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கூலம்பட்டி பிரிவிலிருந்து காமன்பட்டி வழியாக பாளையன்கோட்டை, சித்தையன்கோட்டை பிரிவு வரை தார்ச்சாலை அமைக்கப்பட்டது. பல லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியை ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகளே தங்களின் பினாமி பெயரில் எடுத்து செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், கூலம்பட்டி அரசுப்பள்ளி அருகே கழிவுநீர் செல்வதற்கு ஏற்கெனவே தரைமட்டபாலம் உள்ளது. ஆத்தூர் யூனியன் அதிகாரி ஒருவர் பினாமி பெயரில் காண்ட்ராக்ட் எடுத்து, இந்த பழைய பாலத்திற்கு தடுப்புச்சுவர் மட்டும் கட்டிவிட்டு, சுமார் ரூ.2 லட்சம் செலவில் புதிய தரைப்பாலம் அமைக்கப்பட்டதாக கணக்கு காட்டி, பணத்தை சுருட்டியதாக தெரிகிறது.

இதுகுறித்து கூலம்பட்டி கிராமமக்கள் கூறுகையில், 'ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் தனது பினாமி பெயரில் காண்ட்ராக்ட் எடுத்து தரமில்லாத தார்ச்சாலையை அமைத்துள்ளார். அவரே தார்ச்சாலையை கண்காணிக்கும் பொறுப்பில் இருப்பதால், தார்ச்சாலை ஒரு மாதத்திற்கு கூட தாங்குமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர பலவித முறைகேடுகளும் நடைபெற்றுள்ளது. கட்டாத பாலத்தை கட்டியதாக கணக்கு காண்பித்து பணமும் எடுத்துள்ளனர். கலெக்டர் மற்றும் திட்ட இயக்குநர் வந்து நேரில் விசாரணை செய்தால் முறையான தகவல் கிடைக்கும். வேறு அதிகாரிகளை அனுப்பி விசாரணை செய்தால், அவர்களும் ஊழலுக்கு துணைபோய் விடுவார்கள். கட்டாத பாலம், போடாத சாலை என ஆத்தூர் யூனியன் அதிகாரிகளின் ஊழல் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதுகுறித்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளோம்' என்றனர்.

போட்டோ - http://v.duta.us/AiRU5gAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/I0fd1AAA