கோபி அருகே சிறுத்தை தாக்கி 12 ஆடுகள் பலி

கோபி: கோபி அருகே உள்ள வேட்டுவன்புதூரில் சிறுத்தை தாக்கி 12 ஆடுகள் பலியாகின. கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் வன பகுதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்டது. இந்த வன பகுதியில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் மற்றும் உணவு கிடைக்காத நிலையில் வன விலங்குகள் வன எல்லை பகுதியில் உள்ள கிராமத்திற்குள் சென்று ஆடு உள்ளிட்ட கால்நடைகளை கொன்றும், விவசாய பயிர்களை சேதப்படுத்தியும் வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு வேட்டுவன்புதூரில் உள்ள ரவி என்பவரது தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை ஒன்று அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த 11 ஆடுகளை கடித்து கொன்றது. சப்தம் கேட்டு வெளியில் வந்த ரவி ஆடுகள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும் சிறுத்தை ஒரு ஆட்டை வன பகுதிக்குள் இழுத்து சென்றது தெரிந்தது.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த டி.என்.பாளையம் வன சரகர் மனோஜ்குமார் மற்றும் வனத்துறையினர் சிறுத்தையின் காலடி தடத்தை ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் கண்காணிப்பு காமிரா பொருத்தவும் முடிவு செய்தனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் அதிகளவில் உள்ளது. ஏற்கனவே மழை இல்லாமல் விவசாயம் செய்ய முடியாத நிலையில், கால்நடை வளர்த்து வருகிறோம்.தற்போது சிறுத்தை தாக்குதல் காரணமாக கால்நடையை வளர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பலியான ஆடுகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், என்றனர்.

போட்டோ - http://v.duta.us/_PCiowAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/930SXQAA