சேலம் மாநகராட்சி பகுதியில் அவலம் 12 நாளுக்கு ஒருமுறையே குடிநீர் குழாயடியில் காத்திருக்கும் பெண்கள்

சேலம்: சேலம் மாநகராட்சி 22வது வார்டில் 12 நாட்களுக்கு ஒருமுறை வரும் குடிநீரை பிடிக்க குழாயடியில் பெண்கள் காத்திருக்கும் அவலம் தொடர்கிறது. சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் 5 முதல் 8 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ஆனால் இதில், மாநகராட்சியின் 22வது வார்டுக்கு உட்பட்ட சிவதாபுரம் மெயின்ரோடு பெருமாள்கோயில் தெரு பகுதிக்கு 12 நாட்களுக்கு ஒருமுறை தான், குடிநீர் வழங்குவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த பெருமாள்கோயில் தெருவில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு பெரும்பாலானோர், வீட்டு குடிநீர் இணைப்பு வைக்கவில்லை. தெருக்குழாய்களில் தான், குடிநீரை பிடிக்கின்றனர்.

நேற்று காலை, குடிநீர் சப்ளை செய்யப்படும் 12வது நாள் என்பதால், குழாயடியில் குடங்களை வைத்துக் கொண்டு பெண்கள் காத்திருந்தனர். 8 மணிக்கு தண்ணீர் வந்ததும், வரிசையாக நின்று குடிநீரை பிடித்துச் சென்றனர். இதுபற்றி அப்பகுதி பெண்கள் கூறுகையில், ‘‘மாநகராட்சி நிர்வாகம் எங்கள் பகுதிக்கு 12 முதல் 14 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் கொடுக்கிறார்கள். அதுவும் 2 முதல் 3 மணி நேரம் மட்டும் தண்ணீர் வரும். இதற்காக குழாயடியில் தனி வரிசை ஏற்படுத்தி, ஒவ்வொருவரும் 3 குடம், 5 குடம் என பிடிப்போம். 4 நாட்களுக்கு ஒருமுறையாவது குடிநீர் வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரியுள்ளோம். கோடை என்பதால், போர்வெல்களிலும் தண்ணீர் இல்லை. அதனால், மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

போட்டோ - http://v.duta.us/nmV2ngAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/_wBltQAA