செய்யாறு அருகே 8 வழிச்சாலை திட்டம் எதிர்த்து கிணற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

செய்யாறு: செய்யாறு அருகே தேத்துரை கிராமத்தில் 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கிணற்றில் இறங்கி கருப்புகொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் சேத்துப்பட்டிலும் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக அரசு 8 வழிச்சாலைக்காக மேல்முறையீடு செய்ததை திரும்பப் பெற வேண்டியும், எட்டு வழிச்சாலையை ஆதரித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரை கண்டித்தும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த தேத்துரை கிராமத்தில் நேற்று கிணற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்க திருவண்ணாமலை மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் தேத்துரை பச்சையப்பன் தலைமை தாங்கினார். இதில் 4 பெண்கள் உள்பட விவசாயிகள் எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்து மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு ஒன்றியம் ராந்தம் மலைமேடு பகுதியில் சென்னை- சேலம் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் மற்றும் விவசாயிகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஒரு பிடி மண்ணையும் தரமாட்டோம் என்று பெண்கள் கோஷமிட்டனர். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி ஆகியோருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஆத்தூரை, பாடகம், ராந்தம் உள்பட பல்வேறு பகுதியில் இருந்து திரளான விவசாயிகள், குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.

போட்டோ - http://v.duta.us/yZMo7AAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/mtTPxQAA