சேலம் அருகே வானில் வட்டமடித்த பாராசூட்டால் பரபரப்பு

  |   Salemnews

இளம்பிள்ளை, ஜூலை 29: சேலம் அருகே, நேற்று காலை வானில் வட்டமடித்த பாராசூட்டை கண்டு பொதுமக்கள் திரண்டதால், பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், காகாபாளையம் பகுதியில் நேற்று காலை 9 மணியளவில், வானில் சுமார் 5000 அடி உயரத்தில் பாராசூட் ஒன்று வட்டமடித்தவாறு பறந்து கொண்டிருந்தது. சுமார் அரைமணி நேரமாக வானில் அலைமோதிக் கொண்டிருந்த அந்த பாராசூட்டை கண்டு பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. திடீரென நிலத்தை நோக்கி சர்ரென வந்த அந்த பாராசூட், அங்குள்ள தனியார் நிலத்தில் தரையிறங்கியது. அதில் இருந்து ஆண்-பெண் 2 பேர் இறங்கி வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார், அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரித்தனர். இதில், பாராசூட்டில் வந்து இறங்கியவர்கள், சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே பெருமாகவுண்டம்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன்(45), அவரது மனைவி காயத்ரி(33) என்பது தெரியவந்தது. இதுகுறித்து ராஜேந்திரன் கூறுகையில், ‘கடந்த 3 ஆண்டுக்கு முன்பு, வானில் 10,000 அடி உயரத்தில் பறக்க கூடிய வகையில், பாராசூட்டை வடிவமைத்தேன். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்காக, மகுடஞ்சாவடியில் அமைக்கப்பட்ட ஹெலிபேட்டில் பயணத்தை தொடங்கி, 2 மணி நேரத்திற்குள் மீண்டும் அதே இடத்திற்கே வந்து தரையிறங்குவேன். இன்று(நேற்று) காலை, எனது மனைவியுடன் பயணத்தை தொடங்கிய போது, பலத்த காற்று வீசியதால் பறப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், காகாபாளையம் பகுதியிலேயே சுமார் அரைமணி நேரமாக 5000 அடி உயரத்தில் வானில் வட்டமடித்துக்கொண்டிருந்தேன். அதற்கு மேலே செல்ல முயன்றால் ஆபத்து என்பதால், பாராசூட்டுடன் பத்திரமாக தரையிறங்கினோம்,’ என்றார்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/nbb1pgAA

📲 Get Salemnews on Whatsapp 💬